தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தாராள பயன்பாடு:சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தாராள பயன்பாடு:சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில், சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளமாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

சுற்றுலா செல்வது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது. சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். அதிலும் இயற்கையான சுற்றுலா இடங்களுக்கு சென்றால் மனம் மகிழ்ச்சி கடலில் மிதக்கும்.

சுற்றுலா இடங்கள்

மேற்கு தொடர்ச்சி மலைகளின் கம்பீரத்தை காணும் இடமெங்கும் காட்சிகளாய் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தில் சுற்றுலா இடங்களுக்கு பஞ்சமில்லை. அருவிகள் என்றால் சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி என இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் உள்ளன. வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை என மக்கள் சுற்றிப் பார்த்து வியக்கத்தக்க அணைகள் மாவட்டத்தின் அழகுக்கு மெருகேற்றுகின்றன. அத்துடன் ஹைவேவிஸ் மலைப்பகுதி, வீரபாண்டி கவுமாரியம்மன், மாவூற்று வேலப்பர் கோவில், பென்னிகுயிக் நினைவு மணிமண்டபம், குரங்கணி மலைப்பகுதி, டாப்ஸ்டேஷன் என மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன.

சுகாதாரமற்ற உணவுகள்

இந்த சுற்றுலா இடங்களுக்கு ஆசை, ஆசையாய் செல்லும் மக்களுக்கு அங்கு ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறி தான். மாவட்டத்தில் சுருளி அருவி, வைகை அணை, கும்பக்கரை அருவி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் பகுதிகளாக உள்ளன. ஆனால், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

வைகை அணையில் உள்ள பூங்காக்களில் சுமார் 30 சிறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் தர்ப்பூசணி, அன்னாசி, பப்பாளி போன்ற பழங்களும், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவையும் துண்டு, துண்டுகளாய் வெட்டி திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவை கண்ணாடி பெட்டி அல்லது கண்ணாடி குடுவைக்குள் வைத்து பாதுகாப்பாக விற்பனை செய்யப்படுவது இல்லை. அத்துடன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களில் தான் இவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வைகை அணையை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலக வாசலில் அமைந்துள்ள கடைகளிலும் இதே அவலம் தான்.

புழுதியும், மண்ணும்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களில் சுகாதாரமற்ற நிலையில், விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசை, ஆசையாய் வாங்கி சாப்பிடுகின்றனர். சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் டம்ளர்களை பூங்காவில் கண்ட இடங்களிலும் வீசிச் செல்கின்றனர். இதனால், பூங்காவுக்குள் பிளாஸ்டிக் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. குப்பைத் தொட்டிகள் நிரம்பிய நிலையிலும் அவற்றை சுற்றியும் கிடக்கின்றன.

சுருளி அருவியின் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான உணவுப் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு பஜ்ஜி, வடை, அப்பளம், போண்டா போன்றவை சுகாதாரமற்ற வகையில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. காற்று வீசினால் புழுதியும், மண்ணும் படியும் வகையில் அவை உள்ளது.

உடல் உபாதைகள்

ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்லும் வீரபாண்டியிலும் இதே நிலைமை தான். அங்கும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நடக்கிறது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் இங்கு அதிக அளவில் உள்ளது. இதே நிலைமை தான் மாவட்டத்தில் மற்ற சுற்றுலா இடங்களிலும் நிலவுகிறது.

சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள் ஆசையாய் சுற்றிப் பார்த்து, அங்கு விற்பனை செய்யும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வாங்கித் தின்று வீடு திரும்பிய ஓரிரு நாட்களில் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சுற்றுலா இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் தாராள பயன்பாடு, சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை என்று இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயரளவுக்கு கூட கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுப்பது இல்லை என்று மக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

அஜ்மல்கான் (என்ஜினீயர், உத்தமபாளையம்) :- சுருளி அருவி, வைகை அணை போன்ற சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுலா இடங்கள் என்பது அரசு சார்ந்த இடங்கள். அங்கும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்கிறது என்பது வேதனை அளிக்கிறது. அரசுத்துறை அதிகாரிகள் கண்டும், காணாது போல் இருப்பதை கைவிட வேண்டும்.

ஞானவேல் (தையல் தொழிலாளி, உத்தமபாளையம்) :- சுற்றுலா தலங்களில் சீசன் நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இங்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதால் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்படுகிறது. சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. வாரம் ஒருமுறை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சுற்றுலா இடங்களில் சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகள்

தேன்மொழி (தலைமை ஆசிரியை, மேலசொக்கநாத புரம்):- சுற்றுலா இடங்களுக்கு செல்லும் போது குழந்தைகள் ஆசைப்பட்டு, அடம் பிடித்து கேட்பதால் அங்கு விற்பனை செய்யும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்கும் மனநிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த சுற்றுலா இடங்களிலும் சிறுதானிய உணவுகளை பார்க்க முடியவில்லை. மகளிர் சுயஉதவிக்குழுவினர் பலரும் சிறுதானிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் வகையிலும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் வகையிலும் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கடைகளை வைக்க அனுமதி கொடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story