அறிவுசார் மையத்துக்கு இடம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் தீர்மானம்


அறிவுசார் மையத்துக்கு இடம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் தீர்மானம்
x

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிவுசார் மையத்துக்கு இடம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிவுசார் மையத்துக்கு இடம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

யூனியன் கூட்டம்

பரமக்குடி யூனியன் கூட்டம் அதன் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயேலாளர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் கேட்கப்பட்டு உள்ளது. யூனியன் அலுவலகத்தில் அதற்கான இடம் இல்லை. எனவே அறிவு சார் மையத்தை பரமக்குடி நகரின் மையப் பகுதியான பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், எமனேசுவரம் பகுதி, சந்தை கடை பகுதிகளில் அமைத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் மையப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

தீர்மானம்

எனவே நகரின் மையப்பகுதியில் அதை அமைக்க வேண்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்றார்.

உடனே அனைத்து கவுன்சிலர்களும் அறிவுசார் மையத்திற்கு இடம் வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக அந்த தீர்மானத்தை நீக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நீக்கப்பட்டது.

கூடுதல் நிதி

பின்னர் துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளன. ஆனால் நிதி ஒவ்வொரு மாதமும் குறைவாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யூனியனில் இருக்கும் நிதியையும் எங்கள் அனுமதி இல்லாமலேயே மாவட்ட நிர்வாகம் வங்கி கணக்கில் எடுத்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திணறு கின்றனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கினால் தான் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story