மண் பரிசோதனைக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்; அண்ணா பல்கலைக்கழககல்லூரி உதவி பேராசிரியர் கைது
மண் பரிசோதனைக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியரை வேட்டி-சட்டையில் சென்று போலீசார் கைது செய்தனர்.
மண் பரிசோதனைக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியரை வேட்டி-சட்டையில் சென்று போலீசார் கைது செய்தனர்.
மண் பரிசோதனைக்கு லஞ்சம்
தேனியை அடுத்த பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 41). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை மேம்படுத்தி, அதில் விவசாயம் செய்ய திட்டமிட்டார். இதற்காக அவர் குளத்தில் இருந்து மண் அள்ளி வந்து விவசாய நிலத்தில் கொட்டுவதற்கு முடிவு செய்தார். எனவே குளத்தில் மண் அள்ளுவதற்கு கனிமவளத்துறையிடம் சென்று அனுமதி கேட்டுள்ளார். ஆனால் குளத்தின் மண்ணை பரிசோதனை செய்து அறிக்கை தந்தால் மட்டுமே மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மண் பரிசோதனை செய்வதற்கு பெருமாள்சாமி சென்றார். அங்கு கல்லூரியின் கட்டிடவியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ்பாண்டியன் (39), மண் பரிசோதனை செய்து அறிக்கை தருவதற்கு ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார்.
உதவி பேராசிரியர் கைது
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள்சாமி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. மேலும் அதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா மற்றும் போலீசார், பெருமாள்சாமியுடன் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு சாதாரண உடையில் சென்றனர்.
அதோடு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பெருமாள்சாமியிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். அவருடன் 3 போலீசார் விவசாயிகள் போன்று வேட்டி, சட்டையில் சென்றனர். அதை அறியாத உதவி பேராசிரியர் ரமேஷ்பாண்டியன், பெருமாள்சாமியிடம் பணத்தை வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.