தொழில் போட்டி: ஆட்டநாயகிக்கு ஆபாச அர்ச்சனை...! கரகாட்டக்காரி பரமேஸ்வரி வேதனை...!


தொழில் போட்டி: ஆட்டநாயகிக்கு ஆபாச அர்ச்சனை...! கரகாட்டக்காரி பரமேஸ்வரி வேதனை...!
x

கரகாட்டத்தின் பிரபல ஆட்ட நாயகியான பரமேஸ்வரி தனது ஆட்டத்தை யூடியூப்பில் பதிவேற்றி பிரபலமானார்.

சென்னை

கரகாட்டத்திற்கே உரிய குட்டை பாவாடை... பல வண்ண மேல்சட்டையுடன் நளினமாக அவர் நடந்து வருவதை பார்த்ததும் வைத்த கண் வாங்காமல் எல்லோருடைய பார்வையும் அவர் மீதுதான் விழும்.

மைதானத்தின் நடுவில் அவர் வந்து நின்றதும் விசில் சத்தம் பறக்கும். கைகளை காட்டியும், கையெடுத்து கும்பிட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்தால் கூட்டம் ஆர்பாரிக்கும்...!

அவர்தான் கரகாட்டக்காரி பரமேஸ்வரி...!

கரகாட்டத்தின் பிரபல ஆட்ட நாயகியான பரமேஸ்வரி தனது ஆட்டத்தை யூடியூப்பில் பதிவேற்றி பிரபலமானார்.

தற்போது பரமேஸ்வரி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் அளித்துள்ளார்.

மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான பரமேஸ்வரியை புகழ்ந்து பல்வேறு யூடியூப்பர்கள் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். கரகாட்ட கலையை வளர்ப்பதற்காக, உயிரையே கொடுப்பதாக பேட்டி அளித்த பரமேஸ்வரியை, அவருக்கு தொழில் கற்றுக்கொடுத்ததாக கூறப்படும் மணிமேகலை என்பவர் செல்போனில் அழைத்து எச்சரித்துள்ளார். அதே போல அலங்காநல்லூர் காளீஸ்வரன் என்ற கரகாட்ட பப்பூனும் பரமேஸ்வரியின் ஆட்டத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு,பரமேஸ்வரி மீது மதுரை எஸ்.பி அலுவலகத்தில் புகாரும் அளித்தனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாகவும், போன் மூலமாகவும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட் சிவபிரசாத்திடம் பரமேஸ்வரி புகார் மனுஅளித்தார்.

கரகாட்ட கலையை கெடுக்கும் வகையில் கவர்ச்சியாக ஆடுவது சரியா ? என்ற கேள்விக்கு, தான் கவர்ச்சியாக ஆடவில்லை என்று மறுத்தார், உங்கள் அங்க அசைவுகள் அப்படித்தானே இருக்கின்றது என்றதும் வெட்கத்தால் சிரித்து மலுப்பினார்.

கணவரை இழந்த நிலையில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே ஊர் ஊராக சென்று கரகாட்டம் ஆடுவதாகவும், யூடியூப்பிலும் தனியாக வீடியோ பதிவிடுவதாகவும் தெரிவித்த பரமேஸ்வரி, தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் தன் மீது கொண்ட பொறாமையின் காரணமாகவே திருநெல்வேலி மணிமாலா, திண்டுக்கல் ஜோதி, பிரியா , அலங்காநல்லூர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் தனக்கு கொலை விரட்டல் விடுப்பதாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கும் வெளியூர் ஆட்டக்காரர்களுக்கும் உள்ள தொழில் போட்டி என்பது, நம்ம கரகாட்டக்காரன் காலத்திற்கு முன்பு இருந்தே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வரி கூறியதாவது:-

எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு தம்பியும் இருக்கிறார். என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாயிற்று. எலெக்ட்ரீஷியனான என் தம்பியின் வருமானம் எங்களுக்கு பத்தாத நிலையில் நான் சம்பாதித்தே என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது. நான் பேஸ்புக், யூடியூப்களிலும் என்னுடைய டான்ஸை பதிவு செய்வேன். என் கரகாடத்தில் எந்த ஒரு ஆபாச நடனமும் இருக்காது. என்னுடைய நடன வீடியோக்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டதால் எனக்கு யூடூயூப் மூலமாகவும் கரகாட்ட புக்கிங் வரும். சமீபத்தில் சென்னையில் நடந்த ஐகான் விருதில் கலந்து கொண்டு விருதும் பெற்றேன்.

நான் வாட்ஸ்ஆப் செயலியில் பல கரகாட்ட குழுவில் இருக்கிறேன். என் தினசரி நிகழ்வின் நடன வீடியோக்களை அதில் பதிவு செய்வேன். இதனை பார்த்து என் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்ட சில நபர்கள் தினமும் என்ன தொலைபேசியில் அழைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

நான் கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு அருகில் இருந்த சிறு சிறு ஊர்களுக்கு சென்று கரகாட்டம் ஆடுவேன். கொரோன காலத்தில் என் உறவிர்களிடம் முறைப்படி நன்கு கரகாட்டத்தில் உள்ள அனைத்து வித்தைகளையும் கற்றுகொண்டேன்.

கொரோனா காலத்தில் நானும் என் குடும்பமும் வறுமையின் உச்சத்தை தொட்ட நிலையில் வெளியூர் சென்று கரகாட்டம் ஆடினால் தான் அதிகம் வருமானம் வரும் என்பதால் என் குழந்தைகளை என் தாயிடம் விட்டுவிட்டு சென்று வருவேன். இவ்வாறு என் கரகாட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் கஷ்டப்பட்டு எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.

எனவே என்னுடைய வாழ்க்கையையும் என்னுடைய குழந்தைகளின் வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு மேற்கண்ட நபர்களைதடுத்தும் அழைத்து விசாரித்து எனக்கு எந்த வித இடையூறும் செய்யாமல் அவர்களுக்கு சட்டப்படி அறிவுரையும் வழங்கி தக்க நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றே இன்று அளித்துள்ளேன் என்றார்.

யார் இந்த பரமேஸ்வரி....?

கரகாட்ட கலை என்பது பழங்காலத்தில் இருந்தே தமிழர்களின் பாரம்பரிய கலையாக தொடர்கிறது. சமீப காலமாக கரகாட்டம் என்பது அழிந்து போகுமோ என்று பேசப்பட்டது. ஆனால் இன்றும் இந்த பரமேஸ்வரி போன்ற கலைஞர்கள் இந்த கலையை காலத்திற்கு ஏற்றவாறு கட்டிக்காத்து வருகிறார்கள்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி. பரம்பரையாக தாத்தா, பாட்டி, அம்மா என்று எல்லோரும் கரகாட்ட தொழிலில் ஈடுபட்டவர்கள். காலில் சலங்கை கட்டிக்கொண்டு, தலையில் கரகத்தை வைத்து அம்மா ஆடுவதையும், அவருக்கு கிடைத்த கை தட்டல்களையும் சிறுமியாக இருக்கும்போதே பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அப்போதே தன்னை அறியாமல் கால்கள் ஆடத்தொடங்கும் என்றும் சொல்கிறார் பரமேஸ்வரி.

ஆனால் தந்தை இந்த கலையில் ஈடுபடாதவர். எம்.ஏ. பட்டதாரியான அவர் அரசின் கடைநிலை ஊழியராக பணியாற்றினார். அவருக்கு ஆசை. தன் மகள் ஊர் ஊராக சென்று ஆடிப்பிழைக்க கூடாது. ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.

எனவே மகளை கரகாட்ட கலையை கற்றுக்கொள்ள கூடாது என்று கண்டிப்புடன் கூறி வந்தார். ஆனால் தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றதும் தாய் தனது மகளுக்கு தன்னிடம் இருந்த கலைகளை கற்றுக்கொடுக்க தவறவில்லை.

பரமேஸ்வரி இளம்பெண்ணாக மாறியதும் ஆடத்தொடங்கி இருக்கிறார். அவர் வெளியே சென்று ஆடுவது தெரிந்தால் தந்தை பரமேஸ்வரியை வெளுத்துவிடுவாராம். இதனால் தந்தைக்கு பயந்தே ஆடி வந்ததாக கூறுகிறார்.

ஆசிரியர் பயிற்சி படித்து முடித்த பரமேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவரது இல்லற வாழ்வில் 2 குழந்தைகளுக்கு தாயாகினார். அப்போதுதான் விதி வேறு விதமாக விளையாடியது.

நோய் வாய்பட்டு பரமேஸ்வரியின் கணவர் இறந்து போனார். அதன் பிறகு மொத்த குடும்ப பாரத்தையும் பரமேஸ்வரி சுமக்க வேண்டியதாயிற்று. அப்போதுதான் தான் கற்ற கலைதான் இனி நமக்கு சோறு போடும் என்று நினைத்த பரமேஸ்வரி காலில் சலங்கையை கட்ட தொடங்கி இருக்கிறார்.

அதுவரை மகளை கண்டித்து வந்த தந்தையும் மகளின் எதிர்காலத்தை நினைத்து இனி எப்படியாவது நீ பிழைத்துக்கொள் என்று சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல மகள் ஆடுவதை சற்று தூரத்தில் நின்று பார்க்கவும் செய்திருக்கிறார். அதை வீட்டுக்கு வந்து பாராட்டவும் செய்வாராம்.

இப்படியே தொடர்ந்து வந்த கரகாட்டத்தின் மூலம் ஓரளவு சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார். இந்த தருணத்தில்தான் பலரது வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா இவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது.

அதாவது 3 ஆண்டுகள் வரை எந்த நிகழ்ச்சியும் இல்லாததால் முடங்கி போனார். அதன்பிறகு இப்போது தான் மீண்டும் கரகாட்டம் களை கட்ட தொடங்கி இருக்கிறது. இப்போது ஓய்வின்றி ஆடிக்கொண்டிருக்கிறார். வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் ஓய்வு கிடைப்பதே அரிது என்கிறார்.


Next Story