உழவர் உற்பத்திகுழு மூலம் சுத்தமான எண்ணெய் தயாரிப்பு
சிங்கம்புணரியில் உழவர் உற்பத்திகுழு மூலம் சுத்தமான எண்ணெய் தயாரிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உழவர் உற்பத்திகுழு மூலம் சுத்தமான எண்ணெய் தயாரிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
ஆய்வு
சிங்கம்புணரியில் வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த வாரச்சந்தை நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயலாளர் ஜான் முகமது மற்றும் தி.மு.க. அவைத் தலைவர் சிவக்குமார், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர் மற்றும் பிரதிநிதி குடோன் மணி, புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான காய்கறிகள் தரமான தாக குறைந்த விலையில் கிடைக்க அனைத்து பகுதிகளிலும் தினசரி மற்றும் வாரச்சந்தையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நிரந்தர இடத்தில் புதிதாக ஏற்படுத்தி தந்துள்ளார். இதில் 152 கடைகள், குடிநீர் வசதி மற்றும் சமூக சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. வாரச்சந்தை நேற்றுமுதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
சிங்கம்புணரி பேரூராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் திண்டுக்கல் சாலை கிருங்கா கோட்டை விலக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு அதில் 33 விவசாயிகள் காய்கறி கடைகளை அமைத்து கொள்ள அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதில் விற்பனை செய்ய கடைகள் தினமும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உற்பத்தி நிறுவனம்
சிங்கம்புணரி பேரூராட்சியில் 20 விவசாயிகள் இணைந்து ஒரு குழு உருவாக்கி 50 குழுக்கள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி உள்ளனர். இதில் ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக பங்கேற்று உள்ளார்கள். விவசாயிகள் குழு தொழில் தொடங்க அரசு சார்பில் ரூ.25 லட்சம் மூலதன நிதியாக மானிய தொகை வழங்கப்பட்டு உள்ளது. ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் எண்ணெய் செக்கு எந்திரம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் தங்கள் உற்பத்தி பொருட்களை கொண்டு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் சுத்தமாக எந்தவித கலப்படம் இல்லாமல் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மாதந்தோறும் 6000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 4000 லிட்டர் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒத்துழைப்பு
தரமான முறையில் சுத்தமாகவும் சுகாதாரமும் தயார் செய்யப்பட்டு விவசாயிகளின் மூலம் நேரடியாக விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சிங்கம்புணரி சிறுவர் பூங்கா மற்றும் மீன் மார்க்கெட்ைட ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சுரேஷ், தாசில்தார் கயல் செல்வி, முன்னாள் சூரக்குடி ஊராட்சி தலைவர் ஆனந்த கிருஷ்ணன், காளாப்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.