போடி அருகே போலி ஆவணம் தயாரித்துநிலத்தை அபகரித்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
போடி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரை போலீசார்் கைது செய்தனர்.
போடி அருகே போ.அணைக்கரைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 30). இவருடைய பூர்வீக சொத்தான 2 ஏக்கர் 54 சென்ட் நிலம் அணைக்கரைப்பட்டியில் உள்ளது. இந்நிலையில் போலியான ஆவணங்கள் தயாரித்தும், இறந்து போன நபர்கள் உயிரோடு இருப்பதாக அரசு டாக்டரிடம் போலியான சான்றிதழ் பெற்றும் சிலர் அந்த நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜெயப்பிரகாஷ் மனு தாக்கல் செய்தார். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் உள்பட 11 பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதனை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.