குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல்


குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
x

விவசாயிகளின் வருமானத்தினை உயர்த்துவதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது.

கரூர்

கொப்பரை தேங்காய்

வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயகளின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 2021-ம் ஆண்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காய்களை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அரவை கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றிற்கு ரூ.108.60 வீதமும், பந்து கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றிற்கு ரூ.117.50 வீதமும் கொள்முதல் செய்யப்பட்டது.

கொள்முதல்

இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடைந்ததோடு, கொப்பரையின் சந்தை விலை உயர்ந்ததால், அனைத்து தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைத்தது.

இதேபோல், நடப்பு 2023-ம் ஆண்டு மீண்டும் தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், திருச்சி விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இரும்பூதிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக அரவைக் கொப்பரை நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 6 சதவீதம் இருக்குமாறு, நன்கு உலர வைத்து தரமுள்ள அரவைக் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.108.50 வீதம் கொள்முதல் செய்யப்படும்.

பயன்பெறலாம்

கொப்பரைக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அரவைக்கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் இரும்பூதிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகி பதிவு செய்து தங்களது கொப்பரையினை விற்பனை செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story