கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன ஊர்வலம்
கிருஷ்ணகிரியில் உலக விபத்து மற்றும் விழிப்புணர்வு தினத்தையொட்டி இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரியில் உலக விபத்து மற்றும் விழிப்புணர்வு தினத்தையொட்டி இருசக்கர வாகன ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு சார்பில் உலக விபத்து மற்றும் விழிப்புணர்வு தினத்தையொட்டி இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை வழியாக 5 ரோடு ரவுண்டானா வரை நடைபெற்றது.
இதில் விபத்தில்லா கிருஷ்ணகிரியை உருவாக்க வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு
அப்போது கலெக்டர் கூறும் போது, தமிழக அரசு இன்று (அதாவது நேற்று) 17-ந் தேதி முதல் வருகிற 21-ந் தேதி வரை பேரிடர் கால விபத்து தடுப்பு நடவடிக்கை வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி விபத்து தடுப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், மருத்துவக்கல்லூரி முதல்வர் திருவாசகமணி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) துரைசாமி, மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன், தனசேகரன், திருலோகன், பத்மநாபன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.