ஓசூரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஓசூரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஏரிகளில் கரைக்கப்பட்டன. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
ஓசூர்
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மிகவும் எளிமையாக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மக்கள் மிகவும் எழுச்சியுடன் பண்டிகையை கொண்டாடினர். விழாவையொட்டி ஓசூர் பகுதியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் நற்பணி மன்றங்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விநாயகர் சிலைகளை மக்கள் வழிபட்டு சென்றனர்.
இந்தநிலையில் அரசின் உத்தரவுப்படி, கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன. கடைசி நாளான நேற்று, 100-க்கும் மேற்பட்ட சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று ஓசூர் ராமநாயக்கன் ஏரி, தர்கா அருகேயுள்ள சந்திராம்பிகை ஏரி, தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளம் மற்றும் கெலவரப்பள்ளி அணையில் கரைக்கப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மேற்பார்வையில், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சியையொட்டி, நேற்று காலை முதலே, ஓசூர் நகரம் விழாக்கோலம் பூண்டது. ஊர்வலம் சென்ற எம்.ஜி. ரோடு, நேதாஜி ரோடு, ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், தாலுகா அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. நகர பகுதிகளிலும், ஊர்வலம் சென்ற சாலைகளிலும், போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் சிரமமின்றி வந்து ஊர்வலத்தை ஆங்காங்கே கூடி நின்று கண்டு ரசித்தனர். ஓசூரில், விநாயகர் சிலைகள் ஊர்வலம், மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. நேற்று காலை முதலே கடும் வெயில் வீசியதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், ஊர்வலத்தை காணவந்த பொதுமக்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டனர்.
பொதுமக்களை கவர்ந்தது
அப்போது, இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், தாகத்தை தணிக்கும் வகையில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் மற்றும் குளிர்பானம் வழங்கினர். அவர்களின் இந்த செயல், மனிதநேயத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. ஊர்வலத்தின்போது, மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த கலைஞர்கள் இசைக்கருவிகளை ஓங்கி ஒலித்து இசைத்தவாறு ஆர்ப்பாரிப்புடன் சென்றது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. இதனை அவர்கள் ரசித்து மகிழ்ந்தனர். ஊர்வலத்தில், காற்றடைக்கப்பட்ட பலூனில் ஒரு நபர் விநாயகர் போல் வேடமணிந்து, ஊர்வலம் சென்ற பாதைகளில் நடனமாடியவாறு சென்றது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதனை பொதுமக்கள் மிகவும் ரசித்தனர். இந்த பொம்மை விநாயகருடன், பலர் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.மேலும் ஊர்வலத்தில், சிலைகள் முன்பு சிவன், காளி போன்ற சாமிகளின் வேடமணிந்து, நடனமாடியவாறு சென்றதை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.