49-வது ஆண்டு கம்பன் விழா தொடக்கம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


49-வது ஆண்டு கம்பன் விழா தொடக்கம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
x
சென்னை

சென்னை,

சென்னை கம்பன் கழகத்தின் 49-வது ஆண்டு 'கம்பன் விழா' சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. விழாவில் சென்னை கம்பன் கழக துணைத்தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. வரவேற்புரையாற்றினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். தொடக்க விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதை ராசகோபாலனுக்கும், பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவு பரிசை மு.அப்துல் சமதுக்கும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவு பரிசை கவிஞர் முத்துலிங்கத்துக்கும், கம்பன் பற்றிய சிறந்த நூலுக்கான அ.ச.ஞா. நினைவு பரிசை முகிலை ராசபாண்டியனுக்கும் ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்கினார்.

கலை, இலக்கியத்துறைகளில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், திருக்குறள், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி ஆகிய 6 இலக்கியங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா என்ற தலைப்பில் கவியரங்கம், 'கம்பனின் சொல்வன்மை' என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் உரையாற்றவுள்ளார். 3-வது நாளில் 'ராவணன் வீழ்ச்சியை பெரிதும் விரைவுபடுத்தியது' என்ற தலைப்பில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது.


Next Story