கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கீழக்கரையில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கீழக்கரை,
கீழக்கரை முகமது சதக் அறக்கட்டளை 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டி முகமது சதக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து 20 அணிகள் நாக் அவுட் முறையில் மோதின.அதில் முதல் பரிசு ரூ.10ஆயிரம் மற்றும் தங்க பதக்கத்தை பரமக்குடி ஆர்.எஸ்.வி.சி.அணியினரும் 2-ம் பரிசு ரூ.8 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி மாணவிகளும் 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் மற்றும் வெண்கல பதக்கத்தை கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி அணி மாணவிகளும் 4-ம் பரிசை ராமநாதபுரம் செய்யது அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் கைப்பற்றினர்.
பரிசளிப்பு விழாவுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்கள் ஹாமிது இபுராகிம், ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவ்ரா பாத்திமா வரவேற்றார். முடிவில் சென்னை முகமது ஏ.ஜே.பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சதக் தம்பி நன்றி கூறினார். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முஹைதீன் இபுராகிம், கவுன்சிலர் முகமது காசிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.