போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
நெல்லை சங்கர்நகரில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெல்லை சங்கர்நகர் பேரூராட்சி, சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித்திட்டம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து குப்பை இல்லா நகரம் விழிப்புணர்வு தூய்மை பணி, பயிலரங்கம், கட்டுரை, ஓவிய போட்டிகளை நடத்தியது. தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உடையார் வரவேற்று பேசினார்.
சங்கர்நகர் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் வாழ்த்தி பேசினார். தேசிய பசுமைப்படை, குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கணபதி சுப்பிரமணியன் 'குப்பை இல்லா நகரம் மேலாண்மை' குறித்து பேசினார். குப்பை இல்லா நகரம் அமைப்போம் என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் பரிசுகளை வழங்கினார். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்தனர். ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.