மனிதநேய வார நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
மனிதநேய வார நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி பரிசு வழங்கினார்.
திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன் வரவேற்றார்.
இதில் நலக்குழு உறுப்பினர்கள் வேலு, சிவக்குமார், சேகர் ஆகியோர் கலந்துகொண்டு மனிதநேய வார விழா நோக்கம் குறித்து பேசினர்.
தொடர்ந்து விழாவில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற கலை விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி வழங்கினார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தனி தாசில்தார்கள் வைதேகி, சுப்பிரமணி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க மாநில செயலாளர் வெங்கடேசன், ஆசிரியர் காப்பாளர் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் தேவராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாசெல்வமணி, ஊராட்சி மன்ற தலைவர் வி.பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வந்தவாசி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.