10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கருணை இல்ல மாணவர்களுக்கு பரிசு; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
சமூக பாதுகாப்புத்துறை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கருணை இல்ல மாணவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.
சமூக பாதுகாப்புத்துறை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கருணை இல்ல மாணவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.
பாராட்டு விழா
தூத்துக்குடி சமூகபாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கருணை இல்ல மாணவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். நமது மாவட்டத்திலும் இதேபோல் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 400 மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் உலகத்தில் நடப்பதை தெரிந்து கொள்ள நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்க வேண்டும். அதன் மூலம் நமக்கு பல அனுபவ அறிவு கிடைக்கும். அதே அனுபவ அறிவு பெற்றவர்கள் தான் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். படிப்பறிவோடு சேர்ந்து பொது அறிவையும் வளர்த்து கொண்டு லட்சியத்தை நிர்ணயித்து பயணிக்க வேண்டும்.
வசந்த காலம்
இங்கு இருக்கும் பலர் தாய் தந்தையர்கள் இல்லாத நிலையில் படித்து இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளீர்கள். எனவே இதில் உள்ள பல்வேறு இடர்பாடுகள் எல்லாவற்றையும் ஓரளவு கடந்து இருப்பீர்கள். 18 வயது வரை பள்ளி படிப்பு பருவம். இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா மாணவ-மாணவிகளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்துவது போல் உங்களுக்கும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நடக்கும் என்று உறுதி கூறுகிறேன். படிக்கும் காலத்தில் அடுத்த இலக்கு என்ன என்பதில் நீங்கள் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். பயிற்சியும், முயற்சியும் இருந்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. அதை கடைபிடித்தால் உங்களது வாழ்வில் வசந்தகாலம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ரூபன் கிஷோர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர் பொன்னப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் புனித மரியன்னை கருணை இல்ல இயக்குனர் அல்பட் சேவியர் நன்றி கூறினார்.