கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசாருக்கு பரிசு, சான்றிதழ்


கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசாருக்கு பரிசு, சான்றிதழ்
x

கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசாருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

ராணிப்பேட்டை

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூர்யகலாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து அவர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக சேர்ந்தப்பட்டிருந்தார். அவருடன் குழந்தையும் இருந்தது. கடந்த 19-ந் தேதி அந்த ஆண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் கடத்தி சென்றார். இதையடுத்து வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண்ஸ்ருதி மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே 20-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்தி சென்ற ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குழந்தை கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் மீட்ட வேலூர் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 37 போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நேரில் அழைத்து ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், கிரண்ஸ்ருதி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story