பெரம்பலூரில் நாளை மறுநாள் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை மறுநாள் நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும வளாகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு டிரைவர், தையல், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் ஆசிரியர் கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுனர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் தங்களது ஆதார் எண், பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும வளாகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login-ல் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம், என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.