திருச்சி திரும்பிய தனிப்படை போலீசார்


திருச்சி திரும்பிய தனிப்படை போலீசார்
x

திருட்டு நகைகளை மீட்க சென்ற போது, ராஜஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்று திருச்சி திரும்பினர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் கமிஷனரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

திருச்சி

திருட்டு நகைகளை மீட்க சென்ற போது, ராஜஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்று திருச்சி திரும்பினர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் கமிஷனரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

திருட்டு நகைகள் மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் (வயது 38), சங்கர் (25) ஆகியோர் உள்பட 4 பேர் குடும்பத்துடன் திருச்சியில் தங்கி பல இடங்களில் கொள்ளை அடித்தனர். சுமார் 254 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த இவர்கள், அவற்றை ராஜஸ்தான் மாநிலத்தில் விற்றுள்ளனர்.

இந்தநிலையில் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்ட ரத்தன், சங்கர் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து, ராஜஸ்தானுக்கு வேனில் அழைத்து சென்றனர். அங்கு 300 கிராம் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை மீட்ட போலீசார் மேலும் நகைகளை மீட்க முயற்சி செய்தனர்.

திருச்சி திரும்பினர்

அதற்குள் 2 குற்றவாளிகளையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததால் உதவி கமிஷனர் கென்னடி, இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி மற்றும் ஒரு போலீசார் ரத்தன், சங்கர் ஆகியோரை திருச்சிக்கு விமானத்தில் அழைத்துவந்துவிட்டனர். பின்னர், திருட்டு நகைகளை வாங்கிய பெண்ணின் சகோதரர், அந்த நகைகளுக்கு பதிலாக பணம் தருவதாக கூறி, இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 12 பேரையும் ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் சிக்கவைத்தார்.

அங்கு சிறைபிடிக்கப்பட்ட 12 போலீசாரையும், திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, ராஜஸ்தான் மாநில போலீசாருடன் பேசி, நிலைமையை விளக்கி கூறி 12 பேரையும் விடுவித்தனர். இதைத்தொடர்ந்து 12 பேரும் வேனில் புறப்பட்டு நேற்று மாலை திருச்சிக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர்சத்திய பிரியாவை இரவு 8 மணிக்கு சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன், அங்கு நடந்த சம்பவம் குறித்து நேரில் விளக்கம் அளித்தனர்.

சிரமப்பட்டு பயணம்

திருச்சியில் இருந்து 2 கொள்ளையர்களுடன் சென்ற உதவி கமிஷனர் கென்னடி, 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 15 பேரும் சுமார் 2,300 கி.மீ. தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வரை வேனில் சென்றுள்ளனர். 2 கொள்ளையர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி இருந்ததால் உதவி கமிஷனர், ஒரு பெண் இன்ஸ்பெக்டர், ஒரு போலீஸ்காரர் ஆகிய 3 பேரும் விமானத்தில் திரும்பிவிடனர்.

ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேரும் போகும்போதும், வரும்போதும் வேனிலேயே வந்துள்ளனர். சுமார் 5 நாட்கள் ராஜஸ்தானில் தங்கி இருந்த இவர்களுக்கு சப்பாத்தி மட்டுமே உணவாக கிடைத்துள்ளது. கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு, வேனுக்குள்ளேயே சிரமப்பட்டு தங்கி உள்ளனர்.


Next Story