சென்னை புழல் அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்


சென்னை புழல் அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்
x

சென்னை புழல் அருகே தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட பயணிகள் உயிர்தப்பினர்.

சென்னை,

சென்னை புழல் அருகே உள்ள தண்டல்கழனி பகுதியில் தனியார் ஆம்னி பஸ் பார்க்கிங் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் நெல்லையை சேர்ந்த கண்ணன் (42), நாகர்கோயிலை சேர்ந்த மகேஷ் (36) ஆகிய 2 ஓட்டுநர்களும் தனியார் பஸ்சை செங்குன்றத்துக்கு இயக்கி, அங்கிருந்து 3 பயணிகளை பேருந்தில் ஏற்றிக் கொண்டு நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர்.

பேருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பேருந்து முன் பக்கம் தீப்பற்றி எரிந்தது. இதனை கவனித்த டிரைவர் பஸ்சில் இருந்த அனைவரையும் உடைமைகளுடன் வேகமாக கீழே இறங்கச் செய்தார். சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. நடு ரோட்டில் பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால், செங்குன்றத்திலிருந்து புழல் நோக்கிச் செல்லும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story