தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு
வத்தலக்குண்டுவில் வீட்டுக்குள் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், அவரது தந்தை பழனிசாமி உடன் வசித்து வந்தார். கடந்த 26-ந்தேதி செல்வராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். உடனே அவருடைய தந்தை வத்தலக்குண்டு காந்தி நகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் செல்வராஜ் மட்டும் இருந்தார். அவருடைய வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. உடனே அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு வீட்டின் பூட்டு கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். வீட்டில் செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடனே அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.