கடன் தவணை செலுத்தாததால் குண்டர்களை வைத்து மிரட்டிய தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ்


கடன் தவணை செலுத்தாததால் குண்டர்களை வைத்து மிரட்டிய தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ்
x

கடன் தவணை செலுத்தாததால் குண்டர்களை வைத்து மிரட்டிய தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம் அனுபவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயந்தி - செல்வராஜ் இணையர் வாங்கிய கடனுக்கு ஒரு மாத தவணை தான் செலுத்தவில்லை. அதற்காக நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஜெயந்தி வீட்டுக்குள் குண்டர்களுடன் நுழைந்த வங்கி அதிகாரிகள், இரவு 8 மணி வரை தங்கி அட்டகாசம் செய்ததுடன், அசிங்கமாக பேசி அவமானப்படுத்தியுள்ளனர்!

கடன் தவணையை செலுத்தாவிட்டால்,அதை வசூலிக்க சட்டப்பூர்வமான நடைமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாமல் குண்டர்களை வைத்து மிரட்டுவதும்,அவமதிப்பதும் குற்றம்; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இதற்கு காரணமான வங்கி அதிகாரிகளை கைது செய்யவேண்டும்!

தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தி குடும்பத்திற்கு தனியார் வங்கியிடமிருந்து ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல் அமைச்சர் முன்வர வேண்டும்!" என்று கூறியுள்ளார்.


Next Story