கைதி இறந்த சம்பவம்:சிறை அலுவலர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கைதி இறந்த சம்பவம்:சிறை அலுவலர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கைதி இறந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் சிறை வார்டன், உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


கைதி இறந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் சிறை வார்டன், உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கைதி சாவு

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இரவு நேரங்களில் சுற்றித்திரிந்த அவரை கடந்த 2019-ம் ஆண்டில் போலீசார் கைது செய்து, கும்பகோணம் சிறையில் அடைத்தனர். சிறையில் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

அவரது இறப்பு குறித்து விசாரித்த தஞ்சாவூர் மாஜிஸ்திரேட்டு, சிறை போலீசார் தாக்கியதில் சரவணன் இறந்ததாக அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பேரில் கும்பகோணம் சிறை வார்டன் இளையராஜா, உதவி ஜெயிலர் சுரேஷ்குமார், போலீஸ்காரர் வைரமூர்த்தி ஆகியோர் மீது கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு, அவர்கள் 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

ரூ.5 லட்சம் இழப்பீடு

அப்போது கூடுதல் அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, சரவணன் இறந்தது குறித்து முதலில் சந்தேக மரணமாக பதிவு செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு அறிக்கைக்கு பின்பு, கொலைக்குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட சில குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. சரவணன் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. மனுதாரர்கள் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சரவணனின் வயிறு மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள், ரத்தக்கட்டு இருந்தன என பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரது இறப்பு இயற்கைக்கு மாறாக உள்ளது என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் சட்டப்படியும், துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு அறிக்கையில் கூறியுள்ளார்.

கொலை வழக்கு

இந்த வழக்கின் இறுதி அறிக்கையில் மனுதாரர்கள் தலைமறைவாக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் பணியில் தான் உள்ளனர். மனுதாரர்களை பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் ரகசியமாக செயல்பட்டு உள்ளனர்.எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மனுதாரர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்து, 4 வாரத்தில் புதிதாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மனுதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல மாஜிஸ்திரேட்டு அளித்த அறிக்கையின்பேரில் சிறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியது குறித்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story