கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை - கலெக்டர் தகவல்
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடி நியமனம் மேற்கொள்ளும்போது மேற்கண்ட பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்க அரசு தற்போது ஆணையிட்டுள்ளது.
எனவே மேற்கண்ட முன்னுரிமை பெற விரும்பும் பதிவுதாரர்கள் தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர்களிடமும், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்றிதழ்களை வருவாய்த்துறையின் தகுதியான அலுவலரிடமும் மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்தவர்கள் வருவாய் துறையின் தகுதியான அலுவலர் மூலம் பெறப்படும் சான்றிதழின் அடிப்படையிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமை பதிவு செய்து பயன்பெற இதன்வழி அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.