திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் தலைமை செயலாளர் ஆய்வு
திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களுக்கு குப்பைகளை தரம்பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பதிவு புத்தகம்
சென்னை, அடையாறில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தின் செயல்பாடுகள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புறநோயாளிகள் பிரிவு, வருகைப் பதிவேடு ஆகியற்றை ஆய்வு செய்தார். பின்னர், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவு அட்டைக்கு பதிலாக பதிவு புத்தகமாக வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, புறநோயாளிகள் காத்திருப்பு அறையினை பார்வையிட்டு புறநோயாளிகளின் வருகையை சராசரியாக கணக்கிட்டு கூடுதல் இருக்கைகளை அமைக்க அறிவுறுத்தினார். பின்னர், கர்ப்பிணித் தாய்மார்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பதிவினை நகர்ப்புற சமுதாய நல மையத்தில் பதிவு செய்து அதன் விவரத்தை ஆரம்ப சுகாதார நிலையப் பதிவிற்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிகிச்சை முறை
இதேபோல, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு வழங்கப்படும் சிகிச்சை வழிமுறைகள் குறித்து நர்சுகளிடம் கேட்டறிந்தார். தாய், சேய் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், அங்குள்ள ஆய்வகத்தை ஆய்வு செய்து உபகரணங்களின் எண்ணிக்கை, தேவைப் படும் உபகரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சமர்பிக்க அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்த மருந்தகத்தை பார்வையிட்டு அத்தியாவசியமான மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, காலவதியாக உள்ள மருந்துகளை விழிப்புணர்வுடன் கையாள வேண்டும் என அறிவுறுத்தினார். ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். குடிநீர் வசதியை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விழிப்புணர்வு
இதைத் தொடர்ந்து, திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியையும், காலை உணவுத் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதியை சுத்தமாக வைக்க வேண்டும். கட்டிடக் கழிவுகள் மற்றும் உடைந்த மேஜைகளை அகற்றிட வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர், பள்ளி மாணவர்களுக்கு குப்பைகளை தரம்பிரித்து கையாளுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அங்குள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.