காஞ்சீபுரத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் 'என் பாலிசி என் கையில்' இயக்க தொடக்க விழா
காஞ்சீபுரத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் ‘என் பாலிசி என் கையில்’ இயக்க தொடக்க விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
பயிர்காப்பீடு திட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 'என் பாலிசி என் கையில்' இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார். பின்னர், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காப்பீடு செய்த 50 விவசாயிகளுக்கு பாலிசி விநியோகம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், பயிர் காப்பீடு செய்த கடன் பெற்ற விவசாயிகளுக்கு பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் இல்லம் தேடி பாலிசி விநியோகம் செய்யப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய பயிர்களாக நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகியவை அதிகப்படியான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர்களில் நெல்பயிர் முதன்மை பயிராக சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் ஆண்டுதோறும் 1 லட்சத்து 20 ஆயிரம் 1,35,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இழப்பீட்டுத் தொகை
புயல், மழை, வெள்ளம் மற்றும் கடும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் மகசூல் இழப்பீடு ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் பயிர்காப்பீடு செய்வதன் மூலம் பொருளாதார இழப்பில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் கடன் பெற்ற/கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பருவம் வாரியாக பயிர்காப்பீடு செய்ய மாவட்ட கலெக்டரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. 2021-2022-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் நெல், கடலை, உளுந்து மற்றும் கரும்பு பயிர்களில் பயிர்காப்பீடு செய்துள்ள 13,340 விவசாயிகளுக்கு 19.50 கோடி மகசூல் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
காப்பீடு தொகை வழங்கப்படும்
நடப்பு 2022-2023-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு பயிர்காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் நெல், சம்பா மற்றும் நவரை பருவத்தில் மொத்தம் 11,528 விவசாயிகள் 25ஆயிரத்து 666 ஏக்கர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இது தவிர, ரபி பருவபயிர்களான நிலக்கடலை, கரும்பு ஆகியவற்றில் 64 விவசாயிகள் 136 ஏக்கரில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். சம்பா பருவத்தில் பயிர்காப்பீடு செய்துள்ள பரப்பளவில் நெல் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மகசூல் இழப்பீடு கணக்கெடுக்கும் பணிநடைபெற்று வருகிறது. அதே போன்று நவரை மற்றும் ரபி பருவபயிர்களுக்கு கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனை இம்மாதம் இறுதியில் தொடங்கி முடிக்கப்பட்டு மகசூல் இழப்பீட்டின் சதவீத அடிப்படையில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.