முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்; அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்


புதுக்கோட்டையில் 1,326 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

புதுக்கோட்டை

காலை உணவு திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

71,006 மாணவர்கள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,048 தொடக்கப்பள்ளிகள், 276 நடுநிலைப்பள்ளிகள், 2 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,326 பள்ளிகளில் 71,006 மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலத்தோப்பு கிராமம்

ஆலங்குடி அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட மேலத்தோப்பு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. விழாவுக்கு வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். இதில், திருவரங்குளம் தெற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் அரு.வடிவேல், கே.பி.கே.டி.தங்கமணி, திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், மாங்னம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 42 மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவுகளை பரிமாறினார். பின்னர் அவர் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 வகுப்பறை கட்டிடம்

தமிழகத்தில் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவ- மாணவிகள் பயன் பெறும் வகையில் ரூ.500 கோடியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தை திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிக்கு செல்ல சிமெண்டு சாலை, சமையல் கூடம், கழிவறை உள்ளிட்டவை கட்டப்படுகிறது. பள்ளிக்கான சுற்றுச்சுவர் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்தில் கட்டப்பட உள்ளது. மேலும், இப்பகுதியில் அங்கன்வாடி மையம் திறக்கவும், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருணாஸ், வேப்பங்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ராதேவி நன்றி கூறினார்.

திருமயம்

திருமயம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி பள்ளி மாணவர்களுக்கு உணவை பரிமாறியதோடு அவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஆர்.டி.ஓ. முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story