பிரதமர் வருகை: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்
மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.
சென்னை,
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக வரும் 26-ம் தேதி நாளை (வியாழக்கிழமை) சென்னைக்கு வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. சென்னையில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதன் படி, பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் மக்கள், வாகன ஓட்டிகள் செல்வதை நாளை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த வழிகளை தவிர்த்து மாற்று வழியில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.