மதவாத அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்தும் பிரதமர் மோடியின் கனவு பலிக்காது
மதவாத அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்தும் பிரதமர் மோடியின் கனவு பலிக்காது கே.எஸ்.அழகிரி அறிக்கை.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 8 ஆண்டுகால ஆட்சி குறித்து பா.ஜ.க.வினர் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏழை, எளியோரின் வாழ்க்கைத்தரம் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறபோது, மோடியின் நெருங்கிய நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவீதமும், கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 1,830 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஆதரவால்தான் கவுதம் அதானிக்கு அசுர வளர்ச்சி ஏற்பட்டது என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியின்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்திருக்கிறது. ஏற்கனவே ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையோடு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. அரசு, இந்த விலை குறைப்பைச் செய்திருக்கிறது. இதைப் பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விமர்சனம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி தி.மு.க. ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது?
எனவே, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மதவாத அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்தி, பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை திசைதிருப்பி, அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.