நான் தமிழ்நாட்டிற்கு வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது- பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீசார் கொண்ட ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Live Updates
- 4 March 2024 7:03 PM IST
இந்த நாடுதான் எனது குடும்பம்- பிரதமர் மோடி
உங்களுக்கு தி.மு.க.வையும் தெரியும், காங்கிரசையும் தெரியும். இவர்களை போல பலர் உள்ளனர். இவர்களின் குறிக்கோள் குடும்பம் முதலில். ஆனால் எனக்கோ நாடுதான் முதல் குறிக்கோள். மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடுவதா? இந்த நாடுதான் எனது குடும்பம்,நாட்டு மக்கள்தான் எனது குடும்பம். நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், மகளிர் அனைவரும் எனது குடும்பத்தினர்
- 4 March 2024 6:58 PM IST
கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு திருப்பி தரப்படும்- பிரதமர் மோடி
கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு திருப்பி தரப்படும். இது மோடி அரசின் உத்தரவாதம். குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன. ஆனால், நாங்கள் தேசத்தின் எதிர்காலத்தை பற்றி செயல்படுகிறோம். குடும்ப கட்சிகள் ஆட்சி செய்யும் போது லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் இருள் சூழ்ந்து இருந்தது.
இன்று கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே உருவான ஈனுலை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஈனுலை பணி செய்ய தொடங்கும் போது இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தை பெற்றிருக்கும் உலகின் 2-வது நாடாக இந்தியா இருக்கும். இலக்கு பெரியதாக இருக்கும் போது உழைப்பும் பெரியதாக இருக்க வேண்டும். பாரதம் தன்னுடைய மின் சக்தி தேவைகளுக்காக எவ்வளவு பெரிய பணியை செய்ய வேண்டியுள்ளது தெரியுமா? தெலுங்கானாவில் 1,600 மெகாவாட் தெர்மல் பவர் பிளான்டிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் பல மாநிலங்களில் மின் சக்தி உற்பத்திக்கான ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. நான் இப்போது கூறும் விஷயத்தை கவனமுடன் கேளுங்கள். சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரஜனால் இயங்கும் படகு ஒன்றை தொடங்கி வைத்தேன். பிரதமரின் சூரிய வீடு மின் திட்டம் முழுவதும் உங்களுக்கானது..இலவசமானது. அதிகப்படியான மின்சாரத்தை நீங்கள் விற்கலாம்..உங்களுக்கு லாபம்.
- 4 March 2024 6:41 PM IST
சென்னை மக்களின் துயரத்தை அதிகமாக்குகிறது தி.மு.க - பிரதமர் மோடி தாக்கு
சென்னை வளர்ச்சி திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு தி.மு.க அரசு இடையூறாக இருக்கிறது. இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக விளம்பரம் மட்டுமே செய்தார்கள். நீங்கள் துன்பத்தில் இருந்த போது தி.மு.க உங்களுக்கு உதவி செய்யவில்லை. தி.மு.க அரசு சென்னை மக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கவில்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது. உங்களுக்காக பணியாற்றுகிறது. மத்திய அரசு ரேஷனில் இலவச அரிசி தருகிறது. கொரோனா தடுப்பூசி கொடுத்தது. ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டுள்ளது. தி.மு.க அரசின் மனக்குறை என்னவென்றால் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்கிறது என்பதே.
- 4 March 2024 6:31 PM IST
பா.ஜ.க.விற்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கிறது- பிரதமர் மோடி
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னைக்கு வரும் போதெல்லாம் உற்சாகம் அடைகிறேன். வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் ஒரு அழியா சின்னம் சென்னை.சமீபகாலத்தில் சென்னை வரும் போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. வயிற்றிலே புளியை கரைக்கிறது. காரணம் என்ன தெரியுமா.. பா.ஜ.க மக்கள் ஆதரவு மக்கள் தொடர்ந்து வருகிறது. சென்னையில் இதை தெளிவாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நெடுந்தொலைவுக்கு மக்கள் வெள்ளம் திரண்டு இருப்பதை பார்க்கிறோம்.வளர்ச்சி அடைந்த பாரதத்தோடு வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் இலக்காக கொண்டு இருக்கிறேன். சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.
- 4 March 2024 6:21 PM IST
142 கோடி மக்களும் மோடியின் குடும்பமே - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு
பட்டிதொட்டி முழுவதும் ஒரு குடும்பமாக இருப்பதை பா.ஜ.க. இருப்பதை இந்த தேர்தலில் காட்ட வேண்டும். 142 கோடி மக்களும் மோடியின் குடும்பமே. தனது வாழ்க்கை முழுவதும் நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமருக்கு நாடே குடும்பம்தான். மோடி 400 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்களை நாம் அனுப்பி வைக்க வேண்டும்- அண்ணாமலை பேச்சு
- 4 March 2024 6:16 PM IST
தமிழ் தொன்மையானது என உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் புதிய திட்டங்களை கொண்டு வருகிறார் பிரதமர் மோடி- மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
- 4 March 2024 6:13 PM IST
பா.ஜ.க பொதுக்கூட்ட மேடையின் முகப்பில் மீண்டும் ‘மோடி சர்க்கார்’ என எழுதப்பட்டுள்ளது.
- 4 March 2024 6:07 PM IST
பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இருபுறமும் பா.ஜ.க தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி மோடி சென்றார்.
- 4 March 2024 5:53 PM IST
சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி நந்தனம் செல்கிறார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.
- 4 March 2024 5:28 PM IST
கல்பாக்கம் அதிவேக ஈணுலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பார்வையிட்ட பின் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டுள்ளார்.