பொருநை அருங்காட்சியகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்..!


பொருநை அருங்காட்சியகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்..!
x

பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

நெல்லை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.


Next Story