ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசுதேவநல்லூர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு ஊழியருக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் வட்டார செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, முத்தையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். ஆறுமுகவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். ஆசிரியர்கள் அருள் ஜோசப் ராஜ், ஜெகதீசன், பாலு, மாரிமுத்து, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் இசக்கி ராஜா நன்றி கூறினார்.
பாவூர்சத்திரம்- சங்கரன்கோவில்
பாவூர்சத்திரத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் வட்டார தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் கதிர்வேல் முருகன் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டார செயலாளர் அருள்ராஜ் வரவேற்றார். கல்வி மாவட்ட தலைவர் சுதர்சன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அருள் செல்வன், தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர். பொருளாளர் தேன்மொழி நன்றி கூறினார்.
சங்கரன்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நகர தலைவர் கோமதி சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். தென்காசி கல்வி மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மணிமேகலை உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஹெலன் மேரி கிறிஸ்டிபாய் நன்றி கூறினார்.