ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லை டவுனில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொடக்க கல்வி துறையில் முறைகேடாக, விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டு வருவதை கண்டித்தும், முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவு-மறைவு இன்றி நடத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர்கள் வெனிஸ்ராஜ் இக்னேஷியல், உஷா, துணை செயலாளர்கள் அகஸ்டின், உஷா மாலதி ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர். நெல்லை கல்வி மாவட்ட தலைவர் உமையொருபாகம், செயலாளர் துரை பாக்கியநாதன், சேரன்மாதேவி கல்வி மாவட்ட தலைவர் சபரிகிரிநாதன், செயலாளர் காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெல்லை மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், மாநில செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட பொருளாளர் அமுதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.