இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை: மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டுகோள்
மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மூங்கில்துறைப்பட்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மூங்கில்துறைப்பட்டில் சுற்றிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
10 படுக்கை வசதிகள்
இதுதவிர திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சதாக்குப்பம், அகரம்பள்ளிப்பட்டு, வாழவச்சனூர் உள்ளிட்ட கிராம மக்களும் அவசர காலங்களில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தான் சிகிச்சைக்காக நம்பி இருக்கிறார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களுக்கான வசதியை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பது தான் வேதனைக்குரியதாகும்.
இங்கு ஒரு டாக்டர் மற்றும் 2 செவிலியர்கள் உள்ளனர். 10 படுக்கை வசதிகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு குறைந்தது 200 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வருவதுண்டு. அவர்களுக்கு இங்கு பிரசவமும் பார்க்கப்பட்டு வருகிறது.
37 கி.மீ. பயணிக்கிறார்கள்
ஆனால் இத்தனையும் பகல் நேரங்களில் மட்டும் தான். இரவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாரும் இருப்பதில்லை. இதனால் இரவில் யாருக்கேனும் உடல்நலம் பாதிப்பு மற்றும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் அவர்களது நிலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கான வலியை தரக்கூடியதாகும்.
ஏனெனில் உரிய சிகிச்சை பெற 37 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி அல்லது 26 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவண்ணாமலையில் இயங்கி வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். பிரசவ வலியோடு இத்தனை தூரம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு பெண் பயணிப்பது என்பது தான் வேதனையின் உச்சம்.
கர்ப்பிணி மரணம்
அடிப்படை மருத்துவ வசதி இல்லாததால் சமீபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்து, அதனால் போராட்டமும் நடந்தது. இவ்வாறான ஒரு சூழல் தான் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நிலவுகிறது.
அதேபோன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் இருந்தாலும், பகல் நேரத்தில் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை மேல் சிகிச்சை என்கிற பெயரில் அங்கிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அல்லது சங்காரபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள். இதனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் பயனில்லாத நிலையில் தான் இருக்கிறது.
தரம் உயர்த்த வேண்டும்
ஆகையால், அனைத்து மக்களுக்கும் தரமான சிகிச்சை உரிய நேரத்தில் கிடைத்திடும் வகையிலும், கிராமப்புற கர்ப்பிணி பெண்கள் அச்சமின்றி தங்களது குழந்தையை பெற்றுக்கொள்ளும் விதமாக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது தான் சுற்றிலும் உள்ள ஒட்டுமொத்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும்.
அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகளை கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி அதற்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து, இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கதேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு முன்வர வேண்டும்.
நகர்புற மக்களுக்கு கிடைக்கும் மருத்துவசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பது தான் மூங்கில்துறைப்பட்டு பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.