கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை வழக்கில் பூசாரி கைது


கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை வழக்கில் பூசாரி கைது
x

சென்னை கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை போன வழக்கில் பூசாரி கைது செய்யப்பட்டார். கொள்ளை போன பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டது.

சென்னை

பூஜை செய்த பெண்

சென்னை கீழ்ப்பாக்கம், ரங்கநாதன் அவென்யூவில் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலின் துணை தலைவர் கிம்ராஜ் (வயது 50). இவருடைய மனைவி மீனா, தினமும் தனது வீட்டில் இருந்து தங்க தட்டு, விசிறி, குவளை போன்ற பூஜை பொருட்களை கொண்டு வந்து பூஜை செய்வார்.

இதேபோல கடந்த 13-ந்தேதி காலை மீனா, தங்க பூஜை பொருட்களை தனது வீட்டில் இருந்து கொண்டு வந்து பூஜை செய்தார். பூஜை முடிந்தவுடன் தங்க பூஜை பொருட்களை ஒரு பையில் போட்டு ஓரமாக வைத்தார். பின்னர் கோவிலை 3 முறை சுற்றி வந்து சாமி கும்பிட்டார்.

பூஜை பொருட்கள் கொள்ளை

3 முறை சுற்றி வந்தவுடன் தங்க பூஜை பொருட்கள் உள்ள பையை எடுக்க வந்தார். ஆனால் அதை காணவில்லை. மர்ம நபர் ஒருவர் அவற்றை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் 44 பவுன் தங்க பூஜைபொருட்கள் கொள்ளை போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கோவில் கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் தங்க பூஜை பொருட்கள் அடங்கிய பையை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

பூசாரி கைது

கேமரா காட்சி பதிவை வைத்து குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கோவிலில் பூஜை செய்யும் பூசாரி விஜய்ராவல் (37) தான் குற்றவாளி என்று தெரிய வந்தது. குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த அவர், சொந்த ஊருக்கு தப்பிச்செல்ல முயன்றார். கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பஸ் ஏற காத்திருந்த போது, அவரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை அடித்த தங்க பூஜை பொருட்களை போலீசார் அவரிடம் இருந்து மீட்டனர். விஜய்ராவலின் கூட்டாளி மகேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story