மீன் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு
நாகையில் மீன் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. இறால், நண்டு கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.
நாகையில் மீன் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. இறால், நண்டு கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.
மீன்கள் வரத்து குறைந்தது
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகா், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன் மகாதேவி, விழுந்தமாவடி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவா்கள் விசைப்படகுகள் மற்றும் பைபா் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.
நாகை துறைமுகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அசைவப்பிரியர்கள் அதிகாலையிலேயே திரண்டனர். ஆனால் கரை திரும்பிய மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்கவில்லை என ஏமாற்றத்துடன் கூறினர்.
மீன் வரத்து குறைந்ததால் அதன் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்தது. கடந்த வாரம் ரூ.450-க்கு விற்பனையான பாறை மீன் ரூ.500-க்கும், ரூ.700-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ரூ.750-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இறால் கிலோ ரூ.700, முதல் தர நண்டு ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2-ம் தர நண்டு ரூ.500-க்கு விற்பனையானது.
கடல் காற்று
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'டீசல், ஐஸ், தளவாட பொருட்கள், ஆட்கள் கூலி என ரூ.2 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு சென்று வருகிறோம். எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கடல் காற்று காரணமாக கடந்த 5 நாட்களாக இதே நிலை தான் நீடிக்கிறது. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
சில படகுகளில் அதிக அளவில் கிடைத்த நகரை, கானாங்கெளுத்தி, நெத்திலி, கிழங்கான், தும்புலி, சிறிய வகை பாறை, கோழிமீன் உள்ளிட்ட மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை' என்றனர்.
விலை அதிகரித்தபோதும் அசைவப்பிரியர்கள் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை போட்டி ேபாட்டு வாங்கி சென்றனர்.