மழையால் விலை உயர்வு: மதுரையில் சின்னவெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை


மழையால் விலை உயர்வு: மதுரையில் சின்னவெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
x

மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது

மதுரை


மாட்டுத்தாவணி மார்க்கெட்

தென் மாவட்டங்களில் மிக முக்கிய மார்க்கெட்டாக, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. அதன் பின்னர் இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதுபோல் மதுரையில் உள்ள சில்லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுக்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

படிப்படியாக குறைகிறது

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை குறைந்த நிலையில் இருந்தது. தற்போது மழையின் காரணமாக காய்கறிகளின் விலை படிப்படியாக உயர்ந்துவருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை காரணமாக காய்கறி வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளது. மழைக்காலங்களில் காய்கறி விலை கணிசமாக உயரும். அதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.110 வரை விற்பனையானது. சில்லறை விலையில் தரத்தை பொறுத்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுபோல், பெரிய வெங்காயம் ரூ.50 வரை விற்பனையானது. மழைக்காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. எனவே வரும் நாட்களில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இஞ்சி கிலோ (புதிது) ரூ.120, இஞ்சி (பழையது) ரூ.300, தக்காளி 15 கிலோ பெட்டியின் விலை ரூ.100 முதல் ரூ.180 வரையிலும், சில்லறை விலையில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது. உருட்டு மிளகாய் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், சம்பா மிளகாய் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும் விற்பனையானது. இதுபோல் முருங்கைக்காயின் விலையும் படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது என்றனர்.


Next Story