சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற தொழிலாளி கைது


சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற தொழிலாளி கைது
x

பெருந்துறை அருகே சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் உடை அணிந்து...

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சங்கு நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. அவருடைய மகன் சதாம் உசேன் (வயது 27). இவர் நேற்று காலை 8 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில், விஜயமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த இடத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சதாம் உசேனை திடீரென தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர் சதாம் உசேனிடம், தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்றும், உனது மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. மற்றும் இதர ஆவணங்களை காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்

இதைத்தொடர்ந்து அவர், தனது மோட்டார்சைக்கிளின் ஆவணங்களை அந்த நபரிடம் காண்பித்துள்ளார். அதற்கு அந்த நபர், "எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நீ ரூ.500 என்னிடம் கொடுத்துவிட்டு போ" என்று கூறியுள்ளார். ஆனால் அவர், தற்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த நபர் சதாம்உசேனை மிரட்டினார்.

இதையடுத்து சதாம் உசேன், விஜயமங்கலத்தில் உள்ள தனது நண்பர் சிவா என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார்.

இதைக்கேட்ட சிவா, இதேபோல் தான் கடந்த வாரம் சிறுவலூர் பகுதியில் ஒருவர், தன்னிடம் பேசி பணம் கேட்டார். நான் அவருக்கு பணம் கொடுக்காமல் வந்துவிட்டேன். அதே நபர்தான், இப்போது உன்னையும் மிரட்டுவதாக தெரிகிறது. அந்த நபருக்கு பணம் எதுவும் கொடுக்காதே என்று கூறியுள்ளார்.

போலீசில் புகார்

நண்பர் சொன்னதை கேட்ட சதாம் உசேன் நைசாக அங்கிருந்து தப்பி, பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீசார் விஜயமங்கலத்துக்கு சென்று அந்த நபரை தீவிரமாக தேடினார்கள்.

அப்போது ஊத்துக்குளி ரோடு, மேம்பாலத்துக்கு கீழே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் சீருடை அணிந்துக்கொண்டு நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நபர் விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடைய மகன் தேவராஜ் (29) என்பதும், இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

கைது

மேலும் திருமணம் செய்ய முடிவு செய்த தேவராஜ், அதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் வேடம் போட்டு, பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story