கருப்பு பட்டியல் ஒப்பந்ததாரருக்கு பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
குழித்துறை:
கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
சாலை பணிகளுக்கான ஒப்பந்தம்
குழித்துறை நகராட்சியில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் 9 சாலை பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை குழித்துறை நகராட்சியில் கருப்பு பட்டியலில் உள்ள ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கக் கூடாது என்று ஏற்கனவே நகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அது நகராட்சி ஆணையருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 9 சாலை பணிகளுக்கான ஒப்பந்தம் டெண்டர் கோரப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காகவும், டெண்டரில் கலந்து கொள்வதற்கான டிமாண்ட் டிராப்ட் ஒப்படைப்பதற்காக கருப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
உள்ளிருப்பு போராட்டம்
இது குறித்து கேள்விப்பட்டதும் குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து, ஆணையாளர் ராம திலகம், என்ஜினீயர் பேரின்பம் ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் வழங்கக் கூடாது என்றும் அதற்கான டிமாண்ட் டிராப்ட் (டி.டி.) பெற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.
அதற்கு நகராட்சி ஆணையாளர் தரப்பிலிருந்து பதில் கிடைக்காததால் நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி, கவுன்சிலர்கள் விஜு, அருள்ராஜ், ஜெயந்தி, ஆட்லின் கெனில், ரவி, ரீகன் உள்ளிட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போது, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணி கொடுப்பதில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் அறையில் சுமார் 3 மணி நேரம் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.