ஏற்காட்டில் கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்


ஏற்காட்டில் கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x

ஏற்காட்டில் வருகிற 25-ந் தேதி கோடை விழா தொடங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சேலம்

ஏற்காடு, மே:

ஏற்காட்டில் வருகிற 25-ந் தேதி கோடை விழா தொடங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோடை விழா

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாத இறுதியில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஏற்காட்டில் வருகிற 25-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை அமைச்சர்கள் கே.என்.ேநரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

ஏற்பாடுகள் தீவிரம்

இதையொட்டி ஏற்காடு கலையரங்கம் முன்பு விழா மேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிக்காக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 15 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு, அஸ்டர், சால்வியா, ஜீனியா, அந்தூரியம், லில்லி, ரோபஸ்ட்ரா, கேளன்டர்ல்லா, பெக்கோணியா, கிரைசெண்டமம், ஸ்விட்வில்லியம், பால்சம் போன்ற மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அந்த தொட்டிகளில் மலர்கள் வண்ணமயமாக பூத்துக்குலுங்குகின்றன. இவைகள் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட உள்ளது. மேலும் மலர் அலங்காரங்களும் செய்யப்பட உள்ளன.

பழக்கண்காட்சி

இந்த ஆண்டு கோடை விழா 8 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 நாட்கள் மலர் கண்காட்சி, 2 நாட்கள் பழக்கண்காட்சி, 2 நாட்கள் காய்கறிகள் கண்காட்சி நடத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் மலர்களின் பெயர்கள் மற்றும் வகைகளை சுற்றுலா பயணிகள் எளிதில் அரியும் வகையில் மலர்களின் அருகே கியூ ஆர் கோடு ஸ்கேனர்கள் வைக்கப்பட உள்ளது. இதனை ஸ்கேன் செய்தால் என்ன மலர்? எந்த வகை? இதன் பயன்கள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போன் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே ஏற்காட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், கூடாரம் அமைத்து மலர் செடிகளை பாதுகாத்து வருவதாக அதிகாரிகள் கூறினார்கள்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் லேடி சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், அண்ணா பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனர். இதனிடையே மாலை 3 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.


Next Story