நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி
தோகைமலை பகுதியில் நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தண்ணீர் திறப்பு இல்லை
தோகைமலை ஒன்றியம் கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்.டி.மலை, புழுதேரி, வடசேரி, ஆலத்தூர், பாதிரிபட்டி உள்பட பல்வேறு பகுதிகள் கிணறு மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாக இருந்து வருகிறது.இந்தாண்டு பருவமழை தொடங்கிய போதும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
வயல்களை தயார்படுத்தும் பணி
இந்தநிலையில் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கிணறு மற்றும் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சம்பா நெல் நடவு பணிக்காக வயல்களில் விதை நெல்களை தெளித்து அதனை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பா சாகுபடியில் புரட்டாசி மாதம் இறுதிக்குள் நடவு செய்தால் நோய்களின் தாக்கம் இல்லாமல் நல்ல மகசூல் அடைய முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.