கோவில் நிலங்களை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்: இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
கோவில் நிலங்களை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என கரூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
பொதுக்கூட்டம்
கரூர் வெங்கமேட்டில் நேற்று இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாநில பேச்சாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
முன்னதாக கரூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சார பயணம் சென்னையில் ஜூலை 31-ந்தேதி நிறைவடைய உள்ளது. கரூரில் 16-வது நாள் ெபாதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆலயத்தின் சொத்து கிறிஸ் துவர்களிடமும், மசூதி சொத்து முஸ்லீம்களிடமும் அதனுடைய வருமானத்தை மத வளர்ச்சிக்காகவும், மதமாற்றத்திற்காகவும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
உதவித்தொகை இல்லை
இந்துக்கள் கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல தடைகள் உள்ளது. பல்வேறு அரசு வழிகாட்டுதலின் பெயரில் நடத்த வேண்டியது உள்ளது. அனுமதி வாங்கவும், லஞ்சம் தர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மற்ற மதத்தினர் கட்டிடத்தை கட்டி முடித்து விட்டு கடிதம் போட்டால் போதுமானது. இவ்வாறு இந்துக்களின் உரிமை பறிக்கப்படுகிறது. சட்ட விரோதமாக நிறைய இடங்களில் ஆலயங்கள் இயங்கி கொண்டு உள்ளன. இதுகுறித்து புகார் செய்தும் அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்து ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது இல்லை.
ஒரே மாதிரியான சட்டம்
இந்து ஆலயங்களை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும். தனி வாரியம் அமைக்க வேண்டும். மதசார்பற்ற அரசாங்கம் என சொல்லும் தமிழக அரசு எல்லாருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சார பயணம் நடந்து கொண்டு உள்ளது. இந்துக்கள் எழுச்சியோடு வந்து கொண்டு உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவில் இருந்து நலம் பெற வேண்டும் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.கோவில் நிலங்களை கோவிலின் வளர்ச்சிக்காகத்தான் மன்னர்களும், ஆன்மீக பெரியவர்களும் வழங்கி உள்ளனர். கோவில் இடங்கள் 5¼ லட்சம் ஏக்கர் உள்ளது. ஆனால் தற்போது 4¾ லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் உள்ளது. எஞ்சிய 50 ஆயிரம் ஏக்கர் இடங்கள் கண்டறியப்பட வேண்டும். குத்தகை இடங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப குத்தகை கொடுக்க சொல்லலாம். கோவில் நிலங்களை போலி பத்திரம் தயாரித்து விலை பேசி விற்பதை தடுக்க வேண்டும். 150 இந்து கோவில்களுக்கு மேல் இடிக்கப்பட்டு உள்ளன. அ.தி.மு.க. விற்குள் ஏற்பட்டுள்ள பிளவு வருந்தத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.