ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது
x

ஜூலை 22-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஜூலை 22-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது.

ஆடிப்பூர தேர் திருவிழா

பழமையும், தொன்மையும் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். இந்த விழாக்களின் உச்ச நிகழ்ச்சியாக ஆண்டாள் பிறந்த ஆடிப்பூரத்தை மையமாக கொண்டு ஆடிப்பூர தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த தேர் தமிழகத்தில் 2-வது பெரிய தேராக உள்ளது. இந்த தேர் முழுவதும் தேக்கு மர கட்டைகளால் செய்யப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வானமா மலை ஜீயர் சுவாமிகள் தேரை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

சிற்பக்கலை

இந்த தேர் முன்பு 16 சக்கரங்களை கொண்டு இருந்தது. பழங்காலத்தில் இந்த தேர் நிலைக்கு வர 2 மாதங்கள் கூட ஆகி உள்ளதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தேரில் இருந்த மரச்சக்கரங்கள் மாற்றப்பட்டு திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் இரும்பு சக்கரங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது மாறியுள்ள நவீன உக்திகளால் ஒரே நாளில் அதுவும் தேரோட்டம் தொடங்கிய 4 மணி நேரத்திலேயே நிலைக்கு கொண்டு வரப்படுகிறது.

தீவிரப்பணி

சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தேர் முழுவதும் ராமாயணம் மற்றும் புராண சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தின் போது தேர் ஆடிவரும் பேரழகை காண கண் கோடி வேண்டும் என பக்தர்கள் கூறுவார்கள். இ்வ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி தொடங்குகிறது. 22-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தற்போது தேர் முழுவதும் மூடப்பட்டிருந்த தகர செட்டுகள் அகற்றப்பட்டு உள்ளன. திருவிழாவை முன்னிட்டு தேரை தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வலுவான கண்ணாடி

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தேர் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று முடிந்தவுடன் தேர் தயாரிக்கும் பணி நடைபெறும்.

இந்த ஆண்டு தேரை சுற்றி தகரம் அமைக்கப்படாமல் மிகவும் வலுவான கண்ணாடியை கொண்டு தேர் சுற்றி மூடப்படும். இதனால் தேரின் அழகை வெளியில் இருந்தே மக்கள் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story