பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசியது என்ன? - எஸ்.பி.வேலுமணி பேட்டி
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
சென்னை,
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், அ.தி.மு.க. சார்பில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.
இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் சென்னை சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் சந்தித்து பேசினர். முன்னதாக இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின் கூட்டணி குறித்து தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தே.மு.தி.க.வுடன் கூட்டணியா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நேரில் வந்து பேசியுள்ளோம், நீங்களே முடிவு செய்யுங்கள்" என வேலுமணி கூறினார்.