மலேசியா சென்ற விமானத்தில் நடுவானில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு
துருக்கியில் இருந்து மலேசியாவுக்கு விமானம் பறந்து சென்ற போது, நடுவானில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து துருக்கிஸ் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமானம் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு 326 பயணிகளுடன் சென்றது. இந்த விமானம் நேற்று மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து சென்ற போது, விமானத்தில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த நூர்பரா ஆஷிகுன்(வயது 26) என்ற பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதில் துடிதுடித்தார். இதை கண்ட பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தந்தனர். இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தனர். பின்னர் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கினர். விமானம் தரையிறங்கியதும் சென்னை விமான நிலைய மருத்துவ குழு விமானத்துக்குள் ஏறி பெண்ணை பரிசோதித்த போது அந்த பெண்ணுக்கு குறைபிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்த நிலையில் பிறந்து இருந்ததை கண்டனர்.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டனர்.
பெண்ணுக்கும் அவருடன் வந்த உறவினருக்கும் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் அவசர கால மருத்துவ விசா அளித்தனர். பின்னர், 2 பேரையும் விமானத்தில் இருந்து இறக்கி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த சிசுவின் உடலை விமானத்தில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் முதலில் அனுமதி மறுத்த நிலையில், பின்னர் கொண்டு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து மீதமுள்ள 324 பயணிகளுடன் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.