'பிரபாகரன் மீண்டும் மக்கள் முன் தோன்றுவார்' என திண்டுக்கல்லில் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு


பிரபாகரன் மீண்டும் மக்கள் முன் தோன்றுவார் என திண்டுக்கல்லில் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு
x

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீண்டும் மக்கள் முன் தோன்றுவார் என திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழா் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சமீபத்தில் கூறினார். மேலும் விரைவில் அவர் பொதுவெளியில் தோன்றுவார் என்றும் தெரிவித்தார்.

இது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று பரபரப்பான விவாதமும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில், திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. அதில் "தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமுடன் இருக்கிறார், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவிப்பு" என்று அச்சிடப்பட்டு இருக்கிறது.

பரபரப்பு

"இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் இயக்கம், விடுதலை போராட்ட களத்தில் இருக்கும் வரையில் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் இலங்கையில் கால்பதிக்க விடவில்லை என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும்.

சர்வதேச அரசியல் சூழலையும், இலங்கை அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு தமிழீழ தேசியத் தலைவர் மக்கள் முன் தோன்றி தமிழீழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார். உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்-பழ.நெடுமாறன்" என்றும், "பழ.நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழீழ விடுதலைக்கு தோள் கொடுப்போம், துணை நிற்போம், அணிவகுப்போம்" என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. பிரபாகரன் நலமுடன் இருப்பதாக ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story