மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தேனி, கூடலூரில் மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கம், பொறியாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், ஏ.இ.எஸ்.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். காலையில் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மாலை வரை நீடித்தது.
கூடலூர்
இதேபோல் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலைய அலுவலக வளாகத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யூ. திட்ட செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய சம்மேளன திட்ட செயலாளர் செல்வம், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன கோட்ட செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்சார வாரியத்தில் எந்த ஒரு பணியை செய்தாலும் அரசு அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும் என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சுருளியாறு நீர் மின் நிலையம், பெரியாறு நீர்மின்நிலைய தொழிலாளர்களும் பங்கேற்றனர்.