ஆபத்தான நிலையில் மின்கம்பம்


ஆபத்தான நிலையில் மின்கம்பம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே தேவூர் தற்காலிக பாலத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. விபத்து ஏற்படுவதற்குள் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தேவூர் தற்காலிக பாலத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. விபத்து ஏற்படுவதற்குள் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமையான பாலம்

கீழ்வேளூர் அருகே தேவூர் கடுவையாற்றின் குறுக்கே 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான பாலம் இருந்தது. இந்த பாலம் வழியாக திருத்துறைப்பூண்டி, திருக்குவளை, எட்டுக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் தினமும் சென்று வருகின்றனர்.

இந்த பாலம் சேதமடைந்த காரணத்தால் பொதுப்பணித்துறை மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முற்றிலுமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இரட்டை மின்கம்பம்

இதனால் கீழ்வேளூரில் இருந்து பஸ், கனரக வாகனங்கள் ராதாமங்கலம், இருக்கை கிராமங்கள் வழியாக மாற்று பாதையில் தேவூர் வந்து அனைத்து ஊர்களுக்கும் செல்கிறது. இந்தநிலையில் இடிக்கப்பட்ட பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.

இந்த தற்காலிக பாலம் அமைந்துள்ள பகுதியில் இரட்டை மின்கம்பம் உள்ளது. இந்த இரட்டை மின்கம்பம் நன்கு சாய்ந்தவாறு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

கனரக வாகனம் செல்ல தடை

வாகன போக்குவரத்து அந்த பாதையில் அதிகம் இருப்பதால் எந்த நேரமும் அந்த மின் கம்பத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் தற்காலிக பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்பு போர்டு வைத்திருந்தும் அதையும் மீறி லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் மற்ற வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உயிர்சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள இரட்டை மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story