கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள்
கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் செல்வதால் விபத்தை தடுக்க சவுக்கு கம்பால் விவசாயிகள் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தியுள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர்கள், விவசாயத்தை முதன்மை தொழிலாக செய்து வருகிறார்கள். விளைநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லும் வகையில் விவசாய நிலங்கள் வழியாக ஏரி வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக விவசாயிகள் இருசக்கர வாகனங்கள், மாட்டுவண்டி, லாரிகளில் சென்று வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக சாலையின் குறுக்கே மின்கம்பிகள் தாழ்வாக தொங்கின. அதாவது சாலையில் நின்று கையை மேல்நோக்கி உயர்த்தினாலே மின்கம்பிகள் எட்டிவிடும். அந்தஅளவிற்கு கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக இருந்தன. இதனால் மின்விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் எழுந்தது.
செவிசாய்க்காத மின்வாரிய அதிகாரிகள்
எனவே இது குறித்து அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அதில், தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் அல்லது புதிய மின்கம்பம் நட்டு உயரத்தில் மின்கம்பிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் மின்வாரிய அதிகாரிகளோ செவிசாய்க்கவில்லை. இதனால் விவசாயிகள் தாங்களாகவே களத்தில் இறங்கினர். தாழ்வாக உள்ள மின்கம்பிகளுக்கு சவுக்கு கம்புகள் மூலம் முட்டுக்கொடுத்து, தூக்கி நிறுத்தியுள்ளனர். இது வெறும் தற்காலிகம்தான். பலத்த காற்று வீசினால் அந்த சவுக்கு கம்புகள் கீழே விழுந்து விடும். விபத்தும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே நிரந்தர தீர்வு ஏற்பட மின்கம்பிகளை இழுத்து கட்ட வேண்டும் அல்லது தாழ்வாக செல்லும் பகுதியில் புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.