தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஆபத்தான முறையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஆபத்தான முறையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
சீர்காழி அருகே எடக்குடி வடபாதி ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தபுத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையின் அருகே மின்கம்பிகள் மிகவும் ஆபத்தான முறையில் தாழ்வாக பல்வேறு இடங்களில் செல்கிறது.
இதைப்போல் பல்வேறு வயல்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மின் விபத்து ஏற்படுவதற்குள் எடக்குடி வடபாதி ஊராட்சியில் பல்வேறு சாலைகளில், வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
சீரமைக்க வேண்டும்
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் மணி கூறுகையில் எடக்குடி வடபாதி ஊராட்சியில் சாந்தபுத்தூர், கீழவெளி, கரைமேடு, காளி காவல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதேபோல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மின் கம்பிகள் தாழ்வாகவும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சாந்தபுத்தூர் வழியாக சாலையை கடந்து சென்ற வாகனம் மீது தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் சரக்குவாகனத்தில் இருந்த பருத்தி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து மின்சாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதனால் வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களையும் சீரமைத்து தர வேண்டும் என தெரிவித்தார்.