உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி


உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
x

நெல்லையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர், கலெக்டர் முன்னிலையில் பெண் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி

நெல்லையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர், கலெக்டர் முன்னிலையில் பெண் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு நிகழ்ச்சி

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வழங்கும் அரசு நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 77 பவர் டில்லர்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெண் தீக்குளிக்க முயற்சி

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்தார். கண்இமைக்கும் நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே, அருகில் இருந்த விவசாயி ஒருவர், அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் ஓடிவந்தனர். அந்த பெண்ணை மீட்டு உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கந்து வட்டி கொடுமை

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகரை சேர்ந்த பாலாஜி மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரியவந்தது.

அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும், அவர்கள் தற்போது கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் வேளாங்கண்ணி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

சபாநாயகர், கலெக்டர் முன்னிலையில் பெண் ஒருவர் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story