கோழிப்பண்ணையில் தீ விபத்து


கோழிப்பண்ணையில் தீ விபத்து
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி செத்தன

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் கும்பகோணம் மெயின் ரோட்டில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அந்த கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று வேகமாக வீசவே, தீ மளமளவென பரவி கோழிப்பண்ணை முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அவர், பதறியடித்துக்கொண்டு தனது கோழிப்பண்ணைக்கு விரைந்து ஓடி வந்தார். பின்னர் அவர் அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயை எளிதில் அணைக்க முடியாததால் அவர், விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 2 வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அந்த கோழிப்பண்ணை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதில் பண்ணையில் இருந்த சுமார் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி செத்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Related Tags :
Next Story